டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் மேலூர் பென்னிகுயிக் பேருந்து நிலையம் முன்பு டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு முழுமையாக ரத்து செய்யக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அரிட்டாபட்டி வல்லாளபட்டி நாயக்கர்பட்டி எட்டிமங்கலம் மேலவளவு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு வேதாந்தாவின் கிளை நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில் கடந்த 9ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் இத்திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பல்லுயிர் வாழும் பாதுகாப்பு மண்டலமாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் அரிட்டாபட்டி கிராமத்தை சுற்றி சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு மற்ற பகுதிகளில் மறு ஆய்வு செய்ய ஒன்றிய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இத்திட்டத்திற்கு எதிராகவும் ஒன்றிய அரசு இந்த ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மதிமுக சார்பில் மேலூர் பென்னிகுயிக் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, “அடுத்து வரக்கூடிய நமது தலைமுறைகள் பாதுகாப்பாகவும் சொந்த மண்ணில் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு இப்பகுதி பொதுமக்கள் இத்திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்ட நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவன் என்ற முறையில் இத்திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்க பல்வேறு திட்டங்களை ரகசியமாக வைத்துள்ளேன்” என்றார்.