ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் குழந்தைகள் உள்பட 9 பேர் படுகாயம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக மேம்பாலத்தில் கோர விபத்து சொகுசு கார் மோதி ஆட்டோ சுக்குநூறானது. குழந்தைகள் உட்பட 9 பேர் பலத்த படுகாயமடைந்தனர்.

மதுரை மாவட்டம் மதுரையில் இருந்து தேனி செல்லக்கூடிய முக்கிய சாலையில் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள காமராஜர் பல்கலைக்கழக மேம்பாலத்தில், அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் ஆட்டோ மற்றும் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் குழந்தைகள் உட்பட 9 பேர் பலத்த காயமடைந்து சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தங்களது சொந்த நாட்டாமங்கலம் ஊரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அந்த ஆட்டோவில் தந்தை, மகள், மாமா மற்றும் குழந்தைகள் என மொத்தம் 6 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது
நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்புள்ள மேம்பாலத்தில் ஆட்டோ ஏறிச் சென்றபோது, பின்னால் சொகுசு கார் ஒன்று மின்னல் வேகத்தில் வந்துள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், முன்னால் சென்ற ஆட்டோவின் பின்புறத்தில் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் ஆட்டோவும் காரும் நிலைதடுமாறி மேம்பாலத்திலேயே குப்புறக் கவிழ்ந்தன. இதில் ஆட்டோ முற்றிலும் நசுங்கி சுக்குநூறானது. ஆட்டோவில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினர். இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 6 பேர் மற்றும் காரில் இருந்தவர்கள் என மொத்தம் 9 பேருக்குத் தலை மற்றும் கை, கால்களில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டது. விபத்து நடந்தவுடன் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குத் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு அவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதிவேகமாக காரை ஓட்டி வந்ததே விபத்திற்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பரபரப்பான மேம்பாலத்தில் நடந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

