கடனை அடைக்காவிட்டால் வா வாத்தியார் படம் ஏலம் விடப்படும் - நீதிமன்றம் கடைசி எச்சரிக்கை..!

 
1 1

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள "வா வாத்தியார்" திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாக வேண்டிய இப்படம், நிதி நெருக்கடி காரணமாகத் தள்ளிப்போனது. 2014-ல் திவாலானதாக அறிவிக்கப்பட்ட தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர் தாஸிடம் இருந்து, ஸ்டுடியோ கிரீன் உரிமையாளர் ஞானவேல் ராஜா பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாததே இந்தச் சிக்கலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

அர்ஜுன்லால் சுந்தர் தாஸிடம் பெற்ற கடன் தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தத் தொகையைச் செலுத்தக் கோரி நீதிமன்றச் சொத்தாட்சியர் தொடர்ந்த வழக்கில், ஏற்கனவே ஏழு முறை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. முந்தைய படங்களான 'தங்கலான்' மற்றும் 'கங்குவா' வெளியீட்டின் போது அளித்த உறுதிமொழிகளையும் தயாரிப்பு நிறுவனம் முழுமையாக நிறைவேற்றாததால், "வா வாத்தியார்" படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்தத் தடையை நீக்கக் கோரி ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் தரப்பில், தற்போது 3 கோடியே 75 லட்சம் ரூபாயைச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும், இறுதி வாய்ப்பாகத் திரைப்படத்தை வெளியிட அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. நிலுவையில் உள்ள பெரும் தொகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவான தொகை என்பதால் படக்குழுவிற்குச் சிக்கல் நீடித்தது.

இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் குமரப்பன் அடங்கிய அமர்வு, தயாரிப்பு நிறுவனத்தைக் கடுமையாகச் சாடியது. "ஞானவேல் ராஜா தன்னைத் திவாலானவர் என அறிவித்தால், நீதிமன்றமே அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்து கடனை அடைக்கும்" என்று எச்சரித்தனர். தொடர்ந்து அவகாசம் கேட்டும் கடனை அடைக்கத் தவறியதால், நீதிபதிகள் இந்த விவகாரத்தில் சமரசமின்றிப் பேசினர்.

இறுதியாக, வரும் ஜனவரி 19-ம் தேதிக்குள் முழு கடன் தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஒருவேளை அந்தத் தேதிக்குள் பணம் செலுத்தப்படவில்லை என்றால், "வா வாத்தியார்" திரைப்படத்தைப் பொது ஏலத்தில் விட்டு, அதில் வரும் வருவாயைக் கொண்டு கடனை அடைக்கச் சொத்தாட்சியருக்கு அனுமதி வழங்கப்படும் என அதிரடியாகத் தீர்ப்பளித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.