உஷாரய்யா...உஷாரு..! இனி பொய் போக்சோ புகார் அளித்தால் கடும் நடவடிக்கை..!
சென்னை சென்னை W23 அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பெண் ஒருவர் தனது மாமனார் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். தன் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தன் புகார் மனுவில் கூறியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை நடத்திய துரித விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. புகார்தாரரின் கணவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரது தந்தைக்கும் அவர் கணவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. சில சமயங்களில் அவர் தந்தை அவரை திட்டியிருக்கிறார். கணவனை மாமனார் திட்டுவது மனைவிக்கும் பிடிக்கவில்லை. இதனால் மாமனாரை பழி வாங்க கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து ஆலோசித்து, தங்களின் சொந்த மகளையே இந்த திட்டத்திற்கு ஆயுதமாக பயன்படுத்தியுள்ளனர்.போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர்களின் சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து, புகார்தாரர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய நீதிமன்ற உத்தரவை பெற்று, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மகளிர் காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு பாலியல் தொல்லை தருபவர்களுக்கு சட்டப்படி உரிய தண்டனை வழங்கும் நோக்கத்துடனும் போக்சோ சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், இதை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளித்தால், அவர்கள் மீது சட்டப் பிரிவு 22 (1)ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் துறை எச்சரித்துள்ளது.

