மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் - யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!

மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அமாவாசையை முன்னிட்டு புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்த ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் மேளா பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பு உடைந்தது. அதிகாலை 2 மணிக்கு தடுப்பு உடைந்த நிலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம் அடைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.