சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு

 
bu

சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவது தொடர்பான கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொமுச உள்ளிட்ட 9 அமைப்புகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சென்னையில் தனியார் பேருந்து இயக்குவது தொடர்பான கருத்து ஒன்றை நேற்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருந்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் தனியார் பேருந்து இயக்கம் குறித்து சாதக, பாதகங்கள் ஆய்வு செய்யப்படும். சாதக, பாதகங்கள் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து ஆலோசனை நடத்தி 3 மாதத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. நடைமுறையில் இருக்கும் அரசு பேருந்துகள் சேவை நிறுத்தப்பட மாட்டாது.அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படாது. தேவை அதிகம் உள்ள வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை இயக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும். தனியார் பேருந்து இயக்கப்பட்டாலும் அரசின் நகர பேருந்துகளில் வழங்கப்படும் சலுகைகள் தொடரும். தனியார் பேருந்து விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளும் அரசிற்கே உள்ளது. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். தனியார் பேருந்துகளால், அரசின் எந்தவொரு திட்டங்களும் பாதிக்கப்படாது. மாணவர்கள், மகளிர், முதியோர்களுக்கான பேருந்து சலுகைகள் நிறுத்தப்படாது. அமைச்சரின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு தெரிவித்து தொமுச உள்ளிட்ட 9 அமைப்புகள் முதல் அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்கும் முடிவை திரும்ப பெற வலியுறுத்தி , தங்களது கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்திக்கவும் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளது.