மத்திய பட்ஜெட் 2024 : தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என நம்புகிறேன் - முதல்வர் ஸ்டாலின்..

 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட் 2024-ல், மெட்ரோ ரயில் திட்டம் உள்பட  தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள பல்வேறு  திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

நாடாளுமன்ற  மக்களவையில் ஆண்டுதோறும்  பிப்ரவரி மாதம் 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு  நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருந்ததால் கடந்த பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைக்கும்  புதிய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்பின்னர் நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை அமைத்தது. அதனை தொடர்ந்து கடந்த மாதம் புதிய மக்களவையின்  முதலாவது கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது புதிய எம்.பிக்கள் பதவி ஏற்றதோடு, குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்றது.  

மத்திய பட்ஜெட்

இதனைத்தொடர்ந்து  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22 ஆம் தேதி அதாவது நாளை தொடங்கும் எனவும்,  ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் மத்திய அரசு  அறிவித்தது.  அதன்படி  நாளை மறுநாள் ( ஜூலை 23)  செவ்வாய்க்கிழமை அன்று நடப்பு நிதியாண்டிற்கான (2024 -2025) முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார்.  பிரதமர் மோடி  மூன்றாவது முறையாக அமைத்துள்ள ஆட்சிக்காலத்தில்  தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவே ஆகும்.  இந்த பட்ஜெட்டின் போது 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் உள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென முதலமைச்சை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

சென்னை மெட்ரோ 

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில், 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் உள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலை திட்டத்திற்கான நிதி

10 ஆண்டுகளாக வருமான வரிச்சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதல்

தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த நிதி ஒதுக்கீடு

கிராமப்புற, நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல்

உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.