இனி 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர்! அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு..!
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் அரசுத் துறை உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தின் ஒட்டுமொத்த குடிநீர் வினியோகம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு நடத்தினார்.
அப்போது தமிழகத்தில் உள்ள 25 மாநகராட்சிகளிலும் 24 மணி நேரமும், 7 நாட்களும் தடையற்ற குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். 146 நகராட்சிகள், 479 பேரூராட்சிகளில் குடிநீர் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு தினமும் குறைந்த பட்சம் 3 மணி நேரம் குடிநீர் வழங்குவதை உறுதி செய்து 5 ஆண்டுகளுக்குள் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.
மேலும், அடையாறு மறு சீரமைப்பு திட்டத்துடன் இணைந்து கூவம் ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.

