மதுப்பிரியர்களுக்கும் சீருடை?
டாஸ்மாக் பணியாளர்களைப் போலவே மது அருந்துபவர்களுக்கும் அரசு சார்பில் சீருடை வழங்க வேண்டும் என தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடை ஊழியர்களின் பணியின் தன்மையைக் கருத்தில் கொண்டும், கடைகளில் சீரான, நேர்த்தியான மற்றும் தொழில்முறை தோற்றத்தைப் கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு சீருடைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. டாஸ்மாக் ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள் (Supervisors) என அனைவருக்கும் சீருடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேற்பார்வையாளர்கள், லேசான நீல நிறச் சட்டையும், அடர் நீல நிறக் (Navy Blue) பேண்ட் (Trousers) அணிவர். விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் பழுப்பு நிற (Beige) சட்டையும், அடர் சாம்பல் நிறக் பேண்ட் அணிவர். ஒவ்வொரு ஊழியருக்கும் மூன்று செட் சீருடைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டாஸ்மாக் பணியாளர்களைப் போலவே மது அருந்துபவர்களுக்கும் அரசு சார்பில் சீருடை வழங்க வேண்டும் என தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தினமும் மது அருந்துபவர்களுக்குப் பழுப்பு நிறம், ரெஸ்டோ பார் மற்றும் மனமகிழ் மன்றங்களுக்குச் செல்பவர்களுக்குப் பச்சை நிறம், எப்போதாவது அருந்துபவர்களுக்கு இளஞ்சிவப்பு நிறம் எனப் பிரித்து சீருடை வழங்க வேண்டும் என சங்கத் தலைவர் செல்லப்பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

