தமிழ்நாட்டில் பால் தடையின்றி வினியோகம்.. எந்த சூழலையும் சந்திக்க தயார் என அமைச்சர் அறிவிப்பு..

 
தமிழ்நாட்டில் பால் தடையின்றி வினியோகம்.. எந்த சூழலையும் சந்திக்க தயார் என அமைச்சர் அறிவிப்பு..

தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி பால் விநியோகம் நடைபெற்றுள்ளது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பாலுக்கு லிட்டருக்கு ரூ. 7 கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக  பால்வளத்துறை அமைச்சர் நாசர்,   பால் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.   இந்த  நிலையில், பேச்சுவார்த்தையில்   உடன்பாடு ஏற்படாததால்,  பால் உற்பத்தியாளர்கள்   இன்று முதல்  பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆவின்
 
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவினுக்கு நாள் ஒன்றுக்கு 27½ லட்சம் லிட்டர் பால் அனுப்பப்படுகிறது. இந்த போராட்டத்தின் மூலம் காலை மற்றும் மாலையில் தலா 50 ஆயிரம் லிட்டர் என்ற வகையில் தொடர்ந்து  5 நாட்களில் ஆவினுக்கு 10 லட்சம் லிட்டர் வரை பால் வழங்குவது குறையும். ஒரு கட்டத்தில் ஆவினுக்கு பால் கொள்முதல் முற்றிலும் தடைபடும் என்று பால் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். முதல் நாளான இன்று 25% உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர்,  9,354 சங்கங்களில் ஒரே ஒரு சங்கம் மட்டுமே போராட்டத்தை அறிவித்துள்ளது என்று தெரிவித்தார்.  தமிழ்நாட்டில் ஒரு இடத்தை தவிர வேறு எங்கும் பால் நிறுத்தம் இல்லை என்றும்,  தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி பால் விநியோகம் நடைபெறுவதாகவும்,  எந்த சூழலையும் சந்திப்பதற்கு அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் கூறினார்.