முதல்வர் வருகை- தூர்வாரப்படாத கால்வாய் துணியால் மறைப்பு! மழுப்பும் மாவட்ட ஆட்சியர்
முதல்வர் வருகையையொட்டி மதுரையில் தூர்வாரப்படாத கால்வாய் துணியால் மறைக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நாளை மதுரை மாவட்டம் உத்தங்குடியில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், 3 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். அதுமட்டுமல்லாமல் அமைச்சர்கள், எம்பி-க்கள், மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் என 10 ஆயிரம் பேர் பங்கேற்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றே மதுரை செல்கிறார். இன்று மாலை மதுரை பெருங்குடி முதல் ஆரப்பாளையம் வரை சுமார் 17 கி.மீ. தொலைவுக்கு நடக்கும் ரோடு ஷோவில் பங்கேற்கவுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை கோட்ஸ் பாலம் அருகே முன்னாள் மேயர் முத்துவின் சிலையையும் திறந்துவைக்கவுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தரும் நிலையில் மதுரை பந்தல்குடி சாலையில் சாக்கடை கழிவுகள் கலக்கும் பகுதி துணியால் மூடப்பட்டுள்ளது. தூர்வாரப்படாத நிலையில் சுமார் 2 கி.மீ.க்கு சாக்கடை கால்வாயை அதிகாரிகள் துணியால் மூடியுள்ளதாக புகார் எழுந்தது. முதல்வர் ஸ்டாலினின் ரோடு ஷோ நடக்கும் வழியில் அவரது கண்ணில் படாமல் இருக்க நடவடிக்கை என மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மதுரை ஆட்சியர், மதுரை பந்தல்குடி கால்வாய் துணியால் மறைப்பு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். கால்வாய் மறைக்கப்பட்ட விவகாரம் தற்போதுதான் எனக்கு தெரிய வந்துள்ளது” என்றார்.


