நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை..!

 
1

பாகிஸ்தானில் மறைந்து வாழும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து, பிறகு அவனுக்கு எதிராக மாறியவர் சோட்டா ராஜன். இவர் வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 19 ம் தேதி இவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதில், விஜயகடம் என்ற பெயரில் போலி ஆவணங்களை கொடுத்து சென்னையில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் வாங்கியதாக குற்றம்சாட்டி இருந்தது. இதற்காக அவரது அடையாளங்களை மறைத்து போலியாக தயாரிக்கப்பட்ட பள்ளி மாற்றச் சான்றிதழ், ரேஷன் கார்டு மற்றும் டிடி கொடுத்தது தெரியவந்தது. சிபிஐ விசாரணையின் அவரது உண்மையான பெயர் ராஜேந்திரா என்ற நானா என்ற சோட்டா ராஜன் என கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் 2004 ஜன.,22ம் தேதி குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.இதனை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், பாஸ்போர்ட் பெறுவதற்காக மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்தல் மற்றும் தெரிந்தே போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ராஜனை நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. மேலும் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 55 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.