“மொழியோடும் கல்வியோடும் விளையாடுவது நீறு பூத்த நெருப்பை விசிறி விடுவதற்கு சமம்”- உதயநிதி எச்சரிக்கை

 
உதயநிதி ஸ்டாலின்

தேசிய கல்விக் கொள்கையை அப்படியே முழுவதுமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மிரட்டுவது, மிரட்டலுக்கு நாம் பணியவில்லை என்றால் கோபத்தில் முறைதவறி பேசுவது தர்மேந்திர பிரதான் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை ராமநாதபுரத்திலிருந்து இன்று தொடங்கியுள்ளேன்- உதயநிதி ஸ்டாலின்

இதுதொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “உலகின் மிக மூத்ததொல்குடி நாகரிகத்திற்கு சொந்தக்காரர்களான நம்மை பார்த்து நாகரிகமில்லாதவர்கள் என்று தரம் தாழ்ந்து நாடாளுமன்றத்திலேயே தமது எரிச்சலைக் கக்கியிருக்கிறார் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். தமிழ்நாட்டின் எம்.பி.க்களை பார்த்து அப்படி பேசுவது, அவர்களை வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒட்டுமொத்த தமிழர்களையுமே கொச்சைப்படுத்துவதாக தான் அர்த்தம்.


திராவிட நாகரிகத்தின் தொன்மையும் சிறப்பும் அவருக்கு தெரியாது. நம் நாகரிகம் பற்றிய வரலாறு தெரியவில்லை என்றாலும் கூட பரவாயில்லை, நம்முடைய கடந்த ஒரு நூற்றாண்டு கால சமூக - அரசியல் வரலாற்றை தெரிந்திருந்தாலும் இதுபோன்று எல்லைமீறி அவர் பேசியிருக்க மாட்டார். டெல்லியில் இருந்து ஆள்வதால், ஏதோ அவர் நமக்கு "மேல்" என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்! தேசிய கல்விக் கொள்கையை அப்படியே முழுவதுமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மிரட்டுவது, மிரட்டலுக்கு நாம் பணியவில்லை என்றால் கோபத்தில் முறைதவறி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. நம் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்கு ஒன்றிய அரசு நியாயமாக தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் மொழியோடும் கல்வியோடும் உரிமையோடும் விளையாடுவது நீறு பூத்த நெருப்பை விசிறி விடுவதற்கு சமம். கண்டிக்கிறோம், எச்சரிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.