“நீங்க உழைக்க தயாராக இருந்தால் உங்களை உயர்த்த நாங்கள் தயாராக இருக்கிறோம்”- உதயநிதி ஸ்டாலின்

 
உதயநிதி ஸ்டாலின்

சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக இளைஞரணி சார்பில் சென்னை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட சைதாப்பேட்டை வேளச்சேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வார்டுகளிலும் பாகங்களிலும் நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்வில் மருத்துவத்துறை அமைச்சரும், திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான மா சுப்பிரமணியன், துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோரும் புதிதாக சேர்க்கப்பட்ட நிர்வாகிகள் இளைஞர் அணி நிர்வாகிகள் 700 கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை ராமநாதபுரத்திலிருந்து இன்று தொடங்கியுள்ளேன்- உதயநிதி ஸ்டாலின்

தொடர்ந்து நிகழ்வில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்தியாவிலேயே கலைஞர் தான் நம் இயக்கத்திற்கு என இளைஞர் அணி தொடங்கினார். அவர் போட்ட விதை இன்று ஆலமரமாக நிற்கிறது. இந்தியாவில் பல கட்சிகள் பூத் கமிட்டிகள் அமைக்கவே சிரமப்பட்டு கொண்டு இருக்கும் நேரத்தில் நம் இயக்கத்தில் ஒவ்வொரு பூத்துக்கும் தனித்தனி இளைஞர் அணி நிர்வாகி உள்ளார். இளைஞர் அணி நிர்வாகிகள் சரியாக உழைத்தால் அவர்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த மாவட்ட தலைவர் மா சுப்பிரமணியன் இளைஞர் அணியில் சிறப்பாக செயல்பட்டதை பார்த்து அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. தலைவர் மேயர் பொறுப்பு சிறப்பாக செய்தவர். தொடர்ந்து அவர் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சராகவும் பணிகள் செய்து வருகிறார். தமிழ்நாட்டுக்கு துணை முதலமைச்சரும், முதலமைச்சரும் இளைஞர் அணியில் இருந்து தான் வந்துள்ளனர். நீங்கள் உழைக்க தயாராக இருந்தால் உங்களை உயர்த்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

உங்கள் பணி சமூக வலைதளங்களில் post, status போடுவதோடு மட்டுமில்லாமல் களத்தில் இறங்கி பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். நீங்கள் இளைஞர் அணியின் சமூக வலைதள பக்கம், மாவட்ட செயலாளர், மாவட்ட அமைப்பாளர் சமூக வலைதள பக்கங்களை பின் தொடர வேண்டும். தினமும் மறக்காமல் முரசொலி படியுங்கள், பாசறை பக்கத்தை படியுங்கள் எந்த விஷயத்தில் கட்சி என்ன முடிவு எடுக்கிறது. தலைவர் என்ன சொல்லி உள்ளார் என்று அதன்மூலம் தெரிந்துகொள்ள முடியும். நிர்வாகிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். எந்த செயல்பாடுகளை முன்னெடுப்பதாக இருந்தாலும் பகுதி, மாவட்ட பொறுப்பாளர்களிடம் கலந்த ஆலோசித்துக் கொள்ள வேண்டும். அதேபோல் கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் போன்றவை நடத்தப்படும் பொழுது அதில் கலந்து கொள்ளும் அனைவரிடமும் கையெழுத்து பெறுவதை கவனத்துடன் செய்யுங்கள். அது எந்த தவறும் நடக்காமல் ஆதாரமாக நம்மிடம் இருக்கும்.

உதயநிதி ஸ்டாலின்

புதிதாக நிர்வாகிகளாக சேர்ந்திருப்பவர்கள் ஒரு சிலர் அரசியலுக்கே புதிதாக இருக்கலாம். அறியாமல் ஏதாவது தவறு செய்து விட்டால் அவர்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி விடாமல் கட்சியின் செயல்பாடுகள் என்ன சட்ட திட்டங்கள் என்ன என்பதை விளக்கி அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். இன்று சென்னை மாவட்டத்தில் நிர்வாகிகள் சேர்க்கப்பட்டுள்ளது போல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகள் சேர்க்கப்பட்டால் இந்தியாவிலேயே அசைக்க முடியாத அளவுக்கு நம் இளைஞர் அணி உருவாகும். உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்ற கட்சிகளில் கூட இருக்கலாம் அவர்களிடம் நம் கொள்கைகளை, செயல்பாடுகளை, அரசின் சாதனைகளை எடுத்து சொல்லுங்கள். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெரிய வரலாறு உள்ளது. ஒன்றிய அரசு தொடர்ந்து நமக்கு தொந்தரவு அளித்து வருகிறது. மாநிலத்தின் நிதி உரிமையை தொடர்ந்து பறித்து கொண்டு உள்ளார்கள். தேசியக் கல்விக் கொள்கை மூலம் ஹிந்தியை திணிக்க பார்க்கிறார்கள்.

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் இளைஞர் அணியின் பங்கு மிகவும் முக்கியமானது. இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களிடம் நம் நிர்வாகிகள் சென்று நம் கழகத்தை அதன் செயல்பாடுகளை செய்கிறார்கள். அதிமுகவுக்கும், பாஜகவும் இதை பார்த்து பயந்துவிட்டார்கள். எதிர்க்கட்சித் தலைவர் எந்த கூட்டத்தில் பேசினாலும் நம் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்து தான் பேசுகிறார். அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ஹிந்தி திணிப்பு வந்துவிடும். அதனால் நம் தலைவர் சொல்வது போல் இந்த 2026 தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் அதற்காக நாம் உழைக்க வேண்டும். வெல்வோம் தமிழ்நாடு படைப்போம் வரலாறு" என்றார்.