“நீங்க தான் கடவுள்... உங்களை தான் நான் கடவுளாக பார்க்கிறேன்”- உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி 194 வது அ வட்ட திமுக சார்பில், தமிழ்நாடு முதலமைச்சரின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 13 கிராமங்கள் பங்குபெறும் மாபெரும் படகு போட்டி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புதிய படகுகளை பரிசாக மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ் மற்றும் பிரபாகர் ராஜா மற்றும் மீனவ கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “வெற்றி பெற்ற அனைவருக்கும், போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சுற்றுப்பயணத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பெண்கள் கோரிக்கை வைத்தனர். இது முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக டாஸ்மாக் கடையை அகற்றப்பட்டுள்ளது. பெண்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் அது சரி செய்யப்படும். இது மகளிருக்கான ஆட்சி. நரிக்குறவர் மக்கள் எங்களுக்கு வீடு கட்ட நிலமும் அதற்கான நிதியும் தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அடுத்த ஆறு மணி நேரத்தில் அவரது இல்லம் சென்று பட்டா வழங்கியது தான் திராவிட மாடல் அரசு. இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து எல்லா நாட்களும் மகளிர் தினம் தான்.
முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் முதல் கையெழுத்து மகளிர் கட்டணமில்லா பயணம் தான். காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இதுபோன்றே எண்ணற்ற திட்டங்கள் உள்ளது. மீனவர்களுக்கு நிதியை 25000 ஆக உயர்த்தி வழங்கினார். மீனவர்கள் உரிமைத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும் என்ற முறையை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றியவர் முதலமைச்சர். மக்களுக்காக அரசு, மீனவர்களுக்கான அரசு, திராவிட மாடல் அரசு. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. மற்றொரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறீர்கள் அல்லவா நீங்கள் தான் கடவுள். உங்களை தான் நான் கடவுளாக பார்க்கிறேன். எப்போது மழை, வெள்ளம் வந்தாலும் மக்களைக் காக்க முதலில் வருவது மீனவர்களே! 2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மீனவர்கள் மீதுள்ள நம்பிக்கையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் அவர்களை மீண்டும் இரண்டாவது முறையாக முதலமைச்சராக களப்பணி ஆற்றி அமர வைக்கும் பொறுப்பு உங்களுக்கும் உள்ளது” என தெரிவித்தார்.