பாஜக மீது அதிமுகவிற்கு பயம்! அமித்ஷாவுக்கு எதிராக பேச்சுமூச்சே இல்லை- உதயநிதி ஸ்டாலின்

 
உதயநிதி ஸ்டாலின்

என்னை இந்து என நினைத்தால் நான் இந்து, முஸ்லீம் என நினைத்தால் நான் முஸ்லீம், கிறிஸ்தவன் என நினைத்தால் நான் கிறிஸ்தவன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை பாரிமுனை டான் பாஸ்கோ பள்ளி மைதானத்தில் 2500 நபர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுப் பெட்டகங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 5 கிலோ அரிசி , இனிப்புகள் ,  மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பரிசுப் பெட்டகமாக வழங்கப்பட்டது. இதில் அமைச்சர் சேகர்பாபு , மேயர் பிரியா , மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .

நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இன்று 2,500 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை இங்கு  வழங்குகிறோம். சேகர்பாபு இந்து அறநிலையத்துறை அமைச்சர் , ஆனால் கிறிஸ்துமஸ் , ரமலானை அவரை விட யாராலும் சிறப்பாக நடத்த முடியாது. கிறிஸ்துமஸ் என்பது அன்பை பரிமாறும் நிகழ்ச்சி. மொத்த உலகமும் மகிழ்ச்சி அடையும் விழாவாக கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு இந்நிகழ்வில் பங்கேற்பது தனி மகிழ்ச்சி , நான் படித்தது டான் பாஸ்கோ பள்ளியிலும் , லயோலா கல்லூரியிலும்தான். நானும் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் என பேசியது சங்கிகளுக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது. என்னை இந்து என நினைத்தால் நான் இந்து , முஸ்லீம் என நினைத்தால் நான் முஸ்லீம் , என்னை  கிறிஸ்துவர் என்று நினைத்தால் கிறிஸ்துவர். அனைவருக்கும் நான் பொதுவானவன். எல்லா மதமும் அன்பை போதிக்கின்றன. மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவோர்தான் பொய்யாக பேசி வெறுப்பை பரப்புகின்றனர்.


நீதிபதிகளே மத உணர்வுடன் பேசுகின்றனர், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி இசுலாமியர்களுக்கு எதிராக பேசியுள்ளார். அந்த நீதிபதியை பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது, அந்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரிக்கவில்லை. பாஜக மீது அதிமுகவிற்கு பயம். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவளித்துள்ளது. அம்பேத்கரை அமித்ஷா அவமதித்தது குறித்து அதிமுகவிடம் பேச்சு மூச்சே இல்லை. அம்பேத்கர் குறித்த பேச்சு பாஜகவிற்கு பின் விளைவுகளை ஏற்படுத்தும் என ஜெயகுமார் பேசுயுள்ளதே தனது கருத்தும் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. இப்படிப்பட்ட எதிர்கட்சித் தலைவரை எங்காவது பார்த்தது உண்டா..? பின் விளைவு ஏற்படும் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். பாஜகவுடன் அதிமுக கள்ளக் கூட்டணியில் இல்லை.எல்லோருக்கும் தெரியும் வகையில் நல்ல கூட்டணியாகவே உள்ளது என்பது மக்களுக்கு தெரியவந்துள்ளது. பாம்பின் நிழிலில் உள்ள தவளைதான் அதிமுக , பாம்பு பாஜக. 2026 ல் குறைந்தது 200 தொகுதியில் வெற்றி பெறுவோம் என முதல்வர் கூறியுள்ளார் , சிறுபான்மையினர் மீதான நம்பிக்கையாலேயே 200 தொகுதிகளில் வெல்வோம் என கூறுகிறோம்” என்றார்.