எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை; என்னை பொருத்தவரை இவர்கள்தான் கடவுள்- உதயநிதி ஸ்டாலின்

 
உதயநிதி

இன்னொரு உயிரை காப்பாற்றுபவனே உண்மையான  இறைவன் என்பதால், வெள்ளப் பேரிடரில் வேறொரு உயிரை காப்பாற்றிய மீனவர்கள் அனைவருமே இறைவன் தான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Image

சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக்ஜாம் புயலின் போது, வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட 1200 மீனவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் நலத்திட்ட உதவிகளையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில் சென்னை ராயப்பேட்டை Y.M.C.A. மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மீன்வளம் - மீனவர் நலத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Image

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மிக்ஜாம் புயல் பாதிப்பின் போது களத்தில் நின்ற அரசுக்கும் திமுகவினருக்கும் உறுதுணையாக இருந்து மக்களை காப்பாற்றியவர்கள், மீனவர்கள்தான். மீனவர்களிடம் எனக்கு பிடித்தது அவர்களின் உண்மையும் நேர்மையும் துணிச்சலும்தான், மீனவர்கள் வாழ்வாதாரமான படகுகளைக் கொண்டே பாதிக்கப்பட்டவர்கள் காப்பாற்றப்பட்டனர். மழை பாதிப்பு மீட்பு நடவடிக்கைகளில் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்ததற்கு மீனவர்களின் பங்கு, மிக முக்கியம். அரசின் நிவாரண பொருட்களை மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் துணையின்றி மக்களிடம் சேர்த்திருக்க முடியாது.

Image

மீன்பிடி தடை கால உதவி தொகை உயர்வு, நாட்டு படகு மானியம் அதிகரிப்பு என பல்வேறு உதவிகளை தமிழக அரசு செய்து வரும் வரிசையில், இனிவரும் காலங்களில் மீனவர்களது வாழ்வில் மகிழ்ச்சி பெருகும் வகையிலான பல நலத்திட்டங்களை முதல்வர் செய்து தருவார். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, வேறொரு உயிரை காப்பாற்றுபவரே கடவுள், அப்படிப்பட்ட கடவுள் தான் மீனவர்கள்” எனக் கூறினார்.