“பட்டா என்பது உரிமை... நான்கரை ஆண்டுகளில் மட்டும் சுமார் 20 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன”- உதயநிதி
கோவையில் நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில், சுமார் 11 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.137 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி வாழ்த்திப் பேசினார்.அப்போது அவர், 1,500 மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகளுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் - 1500 பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் - 211 மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ள ஸ்கூட்டர்கள் வாகனம் மற்றும் செவித்திறன் கருவிகள் - கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ஆணைகள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினார்.இந்த நிகழ்வின் போது, ரூ.163 கோடி மதிப்பில் பணி நிறைவுபெற்ற திட்டங்களை திறந்து வைத்து, ரூ.32 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கோவை மீது தனிப் பாசம் முத்தமிழறிஞர் கலைஞராக இருக்கட்டும், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களாக இருக்கட்டும், என்றைக்குமே இந்த கோவை மீது அவர்களுக்குத் தனிப் பாசம் உண்டு. நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதல் அடிக்கடி சொல்கின்ற ஒரேயொரு விஷயம், ``வாக்களித்த மக்கள் மகிழும்படி மட்டுமல்ல, வாக்களிக்காத மக்களும் `நமக்கு வாக்களிக்காமல் விட்டுவிட்டோமே’ என்று வருந்துகின்ற அளவிற்கு நான் ஆட்சி செய்வேன்’’ என்பதுதான். அந்த அடிப்படையில் இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவே தமிழ்நாட்டை உற்றுநோக்குகின்ற வகையில், நம்முடைய முதலமைச்சர் இந்தத் திராவிட மாடல் ஆட்சியைச் சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.
மகளிர் மேம்பாடு குறிப்பாக, மகளிர் மேம்பாட்டிற்காக ஏராளமான திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிறார். ஆட்சிக்கு வந்தவுடன் நம்முடைய முதலமைச்சர் இட்ட முதல் கையெழுத்து மகளிர்க்கான விடியல் பயணத் திட்டத்திற்குத்தான். விடியல் பயணத் திட்டத்தின் மூலம் இந்த நான்கரை ஆண்டுகளில் மகளிர் சுமார் 900 கோடி பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மகளிரும் மாதம் குறைந்தது 1,000 ரூபாய் வரை இந்தத் திட்டத்தின் மூலம் சேமிக்கிறார்கள். காலை உணவுத் திட்டம்தாய்மார்கள் தினமும் காலையில் எழுந்து குழந்தைகளுக்குச் சமைப்பதற்குச் சிரமப்படக் கூடாது என்று அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் இன்று ஒவ்வொரு நாளும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள்.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் புதுமைப் பெண் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு வந்தால் மட்டும் போதாது, உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக, அரசுப் பள்ளியில் படித்து எந்தக் கல்லூரியில் சேர்ந்து பயின்றாலும் அவர்களுக்குக் கல்வி ஊக்கத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை உருவாக்கினார். அதேபோல் மாணவர்களுக்காகத் தமிழ்ப் புதல்வன் திட்டத்தையும் துவக்கி வைத்தார். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று இன்னொரு முக்கியமான விஷயம், கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். கல்லூரி மாணவ மாணவிகளின் கல்விக்குத் துணை நிற்கின்ற வகையில், இன்னும் சில நாட்களில் இந்த வருடம் மட்டும் 10 லட்சம் அதிநவீன மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்க இருக்கிறோம். இதை மாணவர்கள் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவே திரும்பிப் பார்க்கின்ற ஒரு திட்டம், அதுதான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம். இன்று தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 30 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்ல, இந்த கோவை மாவட்டத்திற்குத் தொடர்ந்து ஏராளமான நலத்திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிவித்துச் செயல்படுத்தியும் வருகிறார். சமீபத்தில் கோவைக்கு வந்த நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செம்மொழிப் பூங்காவைத் திறந்து வைத்துச் சிறப்பித்தார். நான் இன்று இங்கு வருவதற்கு முன்னால், கோவைக்கு நம்முடைய அரசின் புத்தாண்டுப் பரிசாக 10 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ஹாக்கி மைதானத்தைத் திறந்து வைத்திருக்கிறேன். இனி சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டிகள் சென்னையில் மட்டுமல்ல, மதுரையில் மட்டுமல்ல, உங்களுடைய கோவையிலும் அடிக்கடி நடைபெறும் என்ற வாக்குறுதியை வழங்குகிறேன். கோவை சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் எஸ்.ஐ.ஹெச்.எஸ் (SIHS) குடியிருப்புப் பகுதியில் உயர்மட்ட ரயில்வே மேம்பாலம் கட்ட 2010-ஆம் ஆண்டு கலைஞரின் ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. முந்தைய பத்தாண்டு ஆட்சி செய்தவர்கள், அந்த மேம்பாலப் பணியைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். நம்முடைய அரசு சுமார் 56 கோடி ரூபாய் செலவில், இன்றைக்குக் கட்டி முடித்திருக்கிறது. அதையும் இன்று இந்த விழாவில், உங்கள் முன்னால் நான் திறந்து வைத்துள்ளேன். இந்த மேம்பாலம் மூலமாகச் சுமார் 42,000 கோவை மக்கள் பயன்பெற இருக்கிறார்கள். மேலும் கோவையில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தந்தை பெரியார் அறிவியல் மையத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவை மாநகராட்சி பகுதியில் 2,000 கோடி ரூபாய் மதிப்பில் பாதாளச் சாக்கடைப் பணிகள், 620 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9,000 சாலைப் பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன. கோவை மாவட்டத்தில், இரண்டு முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி சுமார் 7,100 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை நாம் ஈர்த்திருக்கிறோம்.

திராவிட மாடல் அரசின் இதுபோன்ற திட்டங்களால் இன்று நம்முடைய தமிழ்நாடு 11.19 சதவிகித வளர்ச்சியோடு, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நலத்திட்டங்களின் தொடர்ச்சியாகத்தான் இன்று 1,500 பேருக்கு வீட்டுமனைப் பட்டாவை வழங்க இருக்கிறோம். இந்த அரசைப் பொறுத்தவரை பட்டா என்பது சலுகை கிடையாது, அது உங்களுடைய உரிமை. இந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் சுமார் 20 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் 1,500 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளை வழங்க இருக்கிறோம். சில மாதங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டத்திற்குச் சென்றிருந்தபோது, மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் ஒரு வேண்டுகோள் வைத்தார்கள். அரசு ஊழியர்களைப் போல தங்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று கேட்டார்கள். அதை முதலமைச்சரிடம் சொன்னவுடன் உடனடியாக அங்கீகரித்தார். அந்த வகையில்தான் இன்று தமிழ்நாடு முழுவதும் குழுச் சகோதரிகளுக்குப் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குழுச் சகோதரிகள் தங்களுடைய தயாரிப்புப் பொருட்களை 25 கிலோ வரை 100 கிலோமீட்டர் தூரம் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் எடுத்துச் செல்ல முடியும்” என்றார்.


