“எவ்வளவு மழை பெய்தாலும் அதனை சமாளிக்கும் அளவுக்கு அரசு செயல்பட்டு வருகிறது”- உதயநிதி ஸ்டாலின்
எவ்வளவு மழை பெய்தாலும் அதனை சமாளிக்கும் அளவுக்கு அரசு செயல்பட்டு வருகிறது. வட சென்னையில் 18 கால்வாய்கள், 13 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. மொத்தமாக 331 கி.மீ நீளத்திற்கு கால்வாய்கள் தூர்வாரப்பட்டு 3.5 லட்சம் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னெடுப்பாக தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலைக் கல்லூரி அருகில் கால்வாய்கள் மற்றும் மழைக்கான முன்னேற்பாடுகளை குறித்து அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து வரும் நிலையிலும் மற்றும் நாளை மொந்தா புயல் ஆந்திர மாநிலத்தில் கரையை கடக்கும் சூழலில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி அம்பேத்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் உள்ள கால்வாயினை ஆய்வு செய்தார். இதனை அடுத்து டான் போஸ்கோ பள்ளி அருகில் உள்ள கேப்டன் காட்டன் கால்வாய் மேலும் கொடுங்கையூர் குப்பை சேகரிக்கும் வளாகத்தை அருகில் உள்ள கொடுங்கையூர் கால்வாய் மற்றும் மணலி சாலையில் உள்ள லிங்க் கால்வாய் பகுதியினையும் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “வடகிழக்கு பருவமழை முன்னிட்டு நடைபெற்று வரும் பணிகள் குறித்து முதலமைச்சர் அவர்கள் என்னை ஆய்வு மேற்கொள்ள கூறியிருந்தார். அமைச்சர் கே. என். நேரு மேயர் பிரியா மற்றும் அரசு அதிகாரிகளுடன் இன்று ஆய்வு மேற்கொண்டேன். வடசென்னையில் 18 கால்வாய்கள், 13 குளங்கள் சென்னை மாநகராட்சி மூலமாக தூர்வாரப்பட்டு இருக்கிறது. மொத்தமாக 331 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய்கள் தூர்வாரப்பட்டு 3.5 லட்சம் டன் கழிவுகள் சுத்தம் செய்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. `மோந்தா' புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது, மழை நிலவரம், பணிகளை முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். சமூக வலைதளங்களில் பொதுமக்கள் வைக்கின்ற புகார்கள் அவர்களுடைய கோரிக்கைகள் உடனடியாக கவனித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரி கால்வாய், கேப்டன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் ஆய்வு செய்தோம். அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. அடுத்த பத்து நாட்களுக்கு பெரிய மழை இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, எந்த அளவிற்கு மழை அதிகமாக பெய்தாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு நம்முடைய அரசு செயல்படுகிறது” என்றார்.


