"எனக்கு அனுபவம் இல்லைதான்... ஆனா இதுதான் எடப்பாடி பழனிசாமியின் அனுபவம்" - உதயநிதி ஸ்டாலின்
எனக்கு எந்த அனுபவும் இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். எனக்கு எந்த அனுபவும் இல்லை தான், எடப்பாடி பழனிச்சாமியை போல் காலில் விழுந்து பதவி வாங்கும் அனுபவம் எனக்கு கிடையாது, சங்கி கூட்டத்திற்கு அடிமையாக இருக்கும் அனுபவம் எனக்கு கிடையாது. நான் கலைஞரின் பேரன் எப்போதும் மக்களுடன் மக்களாக இருப்பேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வடகாடு முக்கம் பகுதியில் ஆலங்குடி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சிவ.வீ மெய்யநாதனை ஆதரித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்பரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “2021 சட்டமன்றத் தேர்தலில் 25000 வாக்குகள் வித்தியாசத்தில் மெய்ய நாதனை வெற்றி பெற வைக்க சொல்லி பிரச்சாரம் மேற்கொண்டேன் அதேபோல் செய்தீர்கள். அதேபோல் தற்பொழுது 2026 சட்டமன்றத் தேர்தலில் 50000 வாக்கு வித்தியாசத்தில் மெய்யநாதனை வெற்றியடைய வைக்க வேண்டும். ஆலங்குடி மக்கள் சொன்னால் செய்து காட்டி விடுவீர்கள். ஏற்கனவே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டீர்கள். மெய்யநாதனுக்கு அறிமுகம் தேவையில்லை அவர் பரிசீகமானவர். மூன்றாவது முறையாக இந்த தொகுதியில் போட்டியிடுபவர். இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார் இந்த முறை ஹார்டிக் அடிக்கப் போகிறார். நீங்கள் சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்கவில்லை ஒரு அமைச்சரை தேர்ந்தெடுக்க போகிறீர்கள்.... கோபப்பட மாட்டார் திட்ட மாட்டார், சிரித்த முகத்துடன் இருப்பவர், ஆனால் வேலைன்னு வந்துட்டா ஷார்பானவர்.
விளையாட்டுத்துறையில் எனக்கு சீனியர் அமைச்சராக இருந்தவர் மெய்ய நாதன். நானும் ஒரு வேட்பாளர் தான் உங்களுக்கு தெரியுமா? திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் இரண்டாவது முறையாக நானும் வேட்பாளராக போட்டியிடுகிறேன். இதுவரை என் தொகுதிக்கு நான் ஒருமுறைதான் வாக்கு கேட்டு சென்றுள்ளேன். அதையெல்லாம் விட்டுவிட்டு ஏன் இங்கு வந்து வாக்கு கேட்கிறேன் என்றால் என் வெற்றியை விட மெய்யநாதன் வெற்றி மிக முக்கியம். ஆலங்குடி தொகுதியில் மெய்யநாதன் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மேற்கொண்டுள்ளார், இந்தப் பணிகள் தொடர வேண்டும் இன்னும் பல்வேறு பணிகள் செய்ய வேண்டுமென்றால் அதிகமாக்குகள் வித்தியாசத்தில் மெய்யநாதனை வெற்றி பெற செய்ய வேண்டும் வெற்றி அடைந்து விட்டால் அமைச்சராகி விடுவார் இன்னும் பல திட்டங்களை கொண்டு வருவார். திராவிட மடல் 2.0 ஆட்சி அமைந்தவுடன் பல்வேறு திட்டங்களை ஆலங்குடி தொகுதிக்கு நிறைவேற்றி தர வேண்டும் என தற்போது பட்டியலை மெய்யநாதன் கொடுத்துள்ளார். ஐந்தாண்டுகளாக செய்த திட்டங்கள் மக்களிடம் சென்றுள்ளதால் அந்த தைரியத்தில் நாங்கள் மீண்டும் வாய்ப்பு கேட்டு மக்களிடம் செல்கிறோம்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் பரவலாக திட்டங்களை செய்துள்ளோம். 2019ல் மடிக்கணினி திட்டத்தை அதிமுக கைவிட்டது. அப்போதே கைவிட்டு விட்டு திமுக அதை முடக்கி விட்டதாக அதிமுக குற்றம் சாட்டுகிறது. திராவிட மடல் அரசு மடிக்கணினி யாருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை எண்ணி கல்லூரி மாணவர்களுக்கு வழங்கியுள்ளது. மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தும் அதிமுக பாஜக சூழ்ச்சியை முறியடிக்க மூன்று மாதத்திற்கு சேர்த்து 3000 ரூபாயும் கோடை சிறப்பு நிதியாக 2000 என 5000 ரூபாயை மகளிர் உரிமைத் தொகையாக வரவு வைத்தார் முதலமைச்சர். வங்கியில் வரவு வைத்ததை மோடி உருவி விடுவார் என்று எண்ணி உடனடியாக மக்கள் அந்த பணத்தை வங்கியில் இருந்து எடுத்தனர். திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்த அனைத்து திட்டங்களும் நிறைவேற வேண்டுமென்றால் இன்னும் 18 நாட்களும் மக்களை சந்தித்து வாக்கு கேளுங்கள். ஒவ்வொரு தெருவாக ஒவ்வொரு வீடாக ஒவ்வொரு வாக்காளர்களாக சந்தித்து வாக்குறுதிகளை கூறியும் திமுக ஏன் வரவேண்டும் என்று கூறுங்கள். அடிமை கூட்டம் ஆட்சி செய்தால் தமிழ்நாடு எப்படி பின்னோக்கி செல்லும் என்பதையும் பொது மக்களிடம் எடுத்துக் கூறுங்கள். வாக்கு அதிகமாக அதிகமாக அமைச்சர் பொறுப்பு அதிகமாகும். பல திட்டங்களை நிறைவேற்றியதால் வளர்கின்ற மாநிலத்தில் நம்பர் ஒன் மாநிலம் தமிழ்நாடு. ஆனால் ஒன்றிய அரசு எந்த நிதியையும் எந்தத் திட்டத்தையும் தரவில்லை, தமிழ்நாட்டைப் புறக்கணிக்கின்ற பாஜகவை தமிழ்நாடு புறக்கணிக்க வேண்டும். ஏற்கனவே பல தேர்தல்களில் பாஜகவை புறக்கணித்துள்ளோம். பத்து தோல்வி பழனிச்சாமிக்கு மொத்த தோல்வியையும் கொடுக்க வேண்டும். எனக்கு எந்த அனுபவும் இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். எனக்கு எந்த அனுபவும் இல்லை தான். எடப்பாடி பழனிச்சாமியை போல் காலில் விழுந்து பதவி வாங்கும் அனுபவம் எனக்கு கிடையாது. சங்கி கூட்டத்திற்கு அடிமையாக இருக்கும் அனுபவம் எனக்கு கிடையாது. நான் கலைஞரின் பேரன் எப்போதும் மக்களுடன் மக்களாக இருப்பேன்.. ஜாடிக்கேத்த மூடி போல பாஜகவுக்கு அதிமுக அடிமையாக இருக்கிறது. பாஜகவை தமிழ்நாட்டில் நுழைய விட மாட்டோம் என்பதால் அதிமுக என்ற போர்வையை போர்த்தி வருகிறது. அதிமுகவை பாஜக ரிமோட் கண்ட்ரோலாக பயன்படுத்துகிறது....தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என்பதை சட்டமன்ற தேர்தலில் நிரூபித்து காட்டுவோம்” என்று தெரிவித்தார்.

