காலையில் மனு கொடுத்த பெண்களுக்கு மாலையில் வீடு தேடி சென்று பட்டாவை வழங்கிய உதயநிதி!

திருவாரூர் அருகே தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் காலையில் பட்டா வழங்க வேண்டும் என மனு அளித்த நிலையில், மாலையில் உடனடியாக பட்டா மற்றும் கலைஞர் கனவு இல்ல ஆணையினை பயனாளியின் வீட்டிற்கே சென்று நேரில் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் .
நேற்று காலை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பழவனக்குடி ஊராட்சி சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களை சந்தித்து ஊரக பகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள் எவ்வாறு என்பது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து, அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்தார். அப்போது ஒரு சிலர் தங்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் குடியிருப்பு வேண்டும் என கோரிக்கையை வைத்தனர். இது குறித்து துறை ரீதியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் துணை முதலமைச்சர் உறுதியளித்தார்.
காலை தான் கோரிக்கை வைத்த இருந்த நிலையில் மாலையிலே அவற்றிற்கு தீர்வு காணப்பட்டு, சசிகலா, சித்ரா, சுசி, அமுதா ஆகியோருக்கு 4 பேருக்கு வீட்டுமனை பட்டாவும் மற்றும் பிரியா, திவ்யா ஆகிய 2 பேருக்கு 3.50 லட்சம் மதிப்பீட்டிலான கலைஞர் கனவு இல்லத்தின் ஆணை, மற்றும் சுகன்யா என்பவருக்கு வீட்டுமனை பட்டா மற்றும் கலைஞர் கனவு இல்லம் ஆகிய இரண்டுக்குமான ஆணையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரடியாக அவர்கள் இல்லத்திற்கே சென்று வழங்கினார். அப்போது அவர்களது வீட்டிற்குள் சென்று தண்ணீர் குடித்தார். அவர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.