152 மருத்துவ இடங்கள் சரண்டரா?- முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் அவசர கடிதம்
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், இன்று ஜூன் 4ம் தேதி முதல்வர் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 152 உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் அகில இந்தியத் தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே, இதுகுறித்த வழக்கில், தி.மு.க. அரசின் சார்பில் வெற்றிகரமாக வாதங்களை எடுத்து வைத்து, நிரப்பப்படாமல் உள்ள 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்குச் செல்வதை தடுத்து வைத்திருந்தது. ஆனால், அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரே ”அந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டிக்குரிய 152 இடங்களை சரண்டர் செய்கிறோம்” என ஒப்புக்கொண்ட காரணத்தால் உச்சநீதிமன்றம் இப்படியொரு உத்தரவை வழங்கியுள்ளது. இது தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் உயர்தர சிகிச்சைக்கு பின்னடைவை ஏற்படுத்தும். தங்கள் அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் உரிய வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் இந்த இடங்கள் பறிபோகும் சூழல் எழுந்துள்ளது வேதனையாக இருக்கிறது.
தமிழகத்தில் நிரப்பப் படாமல் உள்ள 152 உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை அகில இந்தியத் தொகுப்பு சரண்டர் செய்ய வேண்டாம். 152 உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு, 152 இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு சரண்டர் செய்யப்படுவதை தடுக்க வேண்டும். இது தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் இதய நோய், புற்று நோய், நரம்பியல் தொடர்பான நோய்களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும். உயர்தர சிகிச்சைக்கும் பின்னடைவை ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளார்

