“இத சொன்னா உங்களுக்கு கோபம் வருதா? அப்ப இன்னும் 100 முறை வாழ்த்து சொல்வோம்”- உதயநிதி ஸ்டாலின்

சிறுபான்மையினருக்கு திராவிட மாடல் அரசு உற்றதுணையாக இருக்கும் என்றும், நீங்களும் உற்ற துணையாக இருக்கவேண்டும் எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ரமலான் பண்டிகையொட்டி தமிழ்நாடு வஃக்பு வாரியத்தின் ஒருங்கிணைப்பில் எழை , எளிய மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் விழா மற்றும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “வஃக்பு வாரிய ஏற்பாட்டில் நடக்கின்ற இவ்விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் நான் ரமலானுக்கு வாழ்த்து சொல்வதில் பலருக்கு கோவம் வரும். அப்படி கோபம் வரும் என்றால் இன்னும் 100 முறை வாழ்த்து சொல்வோம். இந்தியாவிலேயே சிறுபான்மை மக்கள் தங்கள் சொந்த வீடு போல இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். சிறுபான்மை மக்களின் மனதில் பெரும்பான்மை பிடித்தது திமுக தான். காயிதே மில்லத் அவர்கள் மருத்துவமனையில் இருந்த போது கலைஞர் நேரில் சென்று சந்தித்தார்கள். அப்போது காயித மில்லத் அவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு நீங்கள் செய்த உதவி செய்துள்ளீர்கள் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது என்றார்கள்.
கலைஞரின் வழியில் இஸ்லாமியர்களுக்கு அனைத்து வகையிலும் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் துணை நின்று வருகிறார்கள். முத்தலாக், உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை வருடா வருடம் சிறுபான்மையினருக்கு நெருக்கடிகளை உருவாக்குகிறது ஒன்றியஅரசு. இப்போது வக்பு வாரிய திருத்த மசோதா வந்தால் வக்பு வாரிய சொத்துகள் பறிபோகலாம். இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் வக்பு வாரியத்தில் வர இயலும். அதனால் தான் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் வலுவாக எதிர்க்கிறார்கள். மிலாடி நபிக்கு விடுமுறை என பலவற்றை செய்தது திமுக அரசு தான். பிற்படுத்தபட்டோர் பட்டியலில் 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொடுத்தவர் கலைஞர். அதே போல் இந்த நான்காண்டு ஆட்சியில் பல்வேறு தர்காக்கள் புணரமைப்பு பணிகள்,நாகூர் தர்காவிற்கு 45கிலோ சந்தக்கட்டை வழங்கியது, நாகூர் தர்காவிற்கு 2கோடி ஒதுக்கி புணரமைப்பு பணிகள் மேற்கொண்டது, ரமலானுக்கு பள்ளிவாசல்களுக்கு 7040டன் அரிசி வழங்கப்பட்ட நிலையில் இவ்வாண்டு 8000டன் அரிசியினை வழங்கவுள்ளார்கள். இப்படி பல உதவிகளை முதலமைச்சர் செய்து வருகிறார். ஹஜ் யாத்திரிகர்களுக்கான ஹஜ் இல்லம் விமான நிலையம் அருகே அமைக்கப்படும் என்று நேற்று அறிவித்தார்கள். கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவித்த போது நன்றி தெரிவிக்காதீர்கள். நானும் உங்களில் ஒருவன் என்றார்கள். அதே போல் தான் உங்களோடு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இருக்கிறார்கள். திராவிட மாடல் அரசு உற்றதுணையாக இருப்பார்கள். நீங்களும் உற்ற துணையாக இருக்கவேண்டும்” என்றார்.