சாலை சரியில்லையா? 'நம்ம சாலை' செயலியில் புகாரளிக்கலாம்!

 
சாலை செயலி

மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை செயலி வழியே பொதுமக்கள் புகைப்படத்துடன் புகாரளிக்கும் வகையில் 'நம்ம சாலை' எனும் செயலியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

Image

சாலைகளில் பள்ளங்கள், மரம் விழுதல், நீர் தேங்கி நிற்பது உள்ளிட்டவை குறித்த புகார்கள் 'நம்ம சாலை ' செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டால், 72 மணி நேரத்திற்குள் சரி செய்யப்படும் வகையிலான செயலியை, சென்னை கிண்டி நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உதயநிதி அறிமுகப்படுத்தினார். நம்ம சாலை செயலி மூலம் சாலையில் உள்ள பழுதுகளை பொதுமக்கள் படம்பிடித்து புகைப்படத்துடன் புகாரளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் பதிவேற்றும் புகார்கள் மின்னஞ்சல் மூலமாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, புகார்கள் சரி செய்யப்படுவதுடன், சரிசெய்யப்பட்ட சாலையின் புகைப்படங்கள் செயலியில்  பதிவேற்றம் செய்யப்பட்டு புகாரளித்தவரின் தொலைபேசி எண்ணுக்கும் அனுப்பி வைக்கப்படும். 

'பள்ளங்களற்ற சாலை' எனும் இலக்குடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இச்செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் புகார்களில் மாநில நெடுஞ்சாலைப் பள்ளங்கள் 24 மணி நேரத்திற்குள்ளும் மாவட்ட சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள் 72 மணி நேரத்திற்குள்ளும் சரிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தங்களுக்குள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் 45 கோட்ட பொறியாளர்களுக்கும் 192 உதவி கோட்ட பொறியாளர்களுக்கும் 274  உதவி பொறியாளர்களுக்கும் நிரந்தர அலைபேசி எண்களாக, CUG  எண்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 

Image

பின்னர், சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டத்தின் கீழ் , ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 204 கோடியே 7 லட்சம் மதிப்பில்  அகலப்படுத்தப்பட்ட மேலூர்-திருப்பத்தூர் இருவழிச்சாலை, 198 கோடியே 65 லட்சம் மதிப்பில் அகலப்படுத்தப்பட்ட தஞ்சாவூர்-மன்னார்குடி இருவழிச்சாலை,  219 கோடியே 47 லட்சம் மதிப்பில் அகலப்படுத்தப்பட்ட விருத்தாசலம்–உளுந்தூர்பேட்டை இரு வழிச்சாலை ஆகியவற்றை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 

மூன்று சாலை மார்கங்களும் இருவழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டதன் மூலம் மதுரையிலிருந்து காரைக்குடிக்கும் விருத்தாசலத்திலிருந்து சென்னை மற்றும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கும் வாகனங்கள் எளிதாக  செல்வதுடன் பயண நேரம் குறையும் என்றும்  விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நகரங்களுக்கு எடுத்து செல்ல உதவும் என்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.