பக்கிங்ஹாம் கால்வாய் புனரமைக்கும் பணி : உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!!

 
udhai


சென்னை மத்திய மாவட்டம் பக்கிங்ஹாம் கால்வாய் புனரமைக்கக்கூடிய பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை கூவம் ஆறு சிவானந்தா சாலை பகுதியில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்கிங்ஹாம் கால்வாய் 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படுகிறது. மத்திய பக்கிங்காம் கால்வாய் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி. மந்தவெளி, நந்தனம், மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து வடியும் வெள்ள நீர் கால்வாயாகவும், கூவம் நதி மற்றும் அடையாறு நதியின் மூலம் வெள்ள நீரை கடலுக்கு செலுத்துகிற  வெள்ள நீர்  கடத்தி கால்வாயாகவும் செயல்படுகிறது. 

Image

மத்திய பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி  புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள  கால்வாயின்  நீர்தேக்க திறனை அதிகப்படுத்தும் வகையில் 1 மீட்டர் ஆழத்திற்கு அதிநவீன தூர்வாரும் இயந்திரங்களின் உதவியுடன் (Amphibious) தூர்வாரப்படுகிறது.

இதன் மூலம் கால்வாயின் வெள்ள நீர் கடத்தும் திறன் வினாடிக்கு 2500 கன அடி ஆக உயரும். இதன் பயனாக மேற்கூறிய பகுதிகளில் இருந்து வெள்ள நீர் வடிந்து கால்வாய் மூலம் விரைவில் கடலுக்கு சென்றடையும்.  மேலும், பக்கிங்காம் கால்வாயின் இரு கரைகளையும் பலப்படுத்தி ஆங்காங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு இடங்களில் சிறுவர் பூங்காக்கள் அமைப்பது, மரக்கன்றுகள் மற்றும் நடைபாதை அமைத்தல் ஆகிய அழகுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், மாநகராட்சி மேயர் பிரியா உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.