சென்னை டைடல் பூங்கா சந்திப்பில் ‘U' வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்!

 
ச்

சென்னையின் முக்கிய போக்குவரத்து சந்திப்பான டைடல் பார்க் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுக்காணும் விதமாக  ரூ.27.50 கோடி மதிப்பீட்டிலான புதிய யு வடிவ மேம்பாலத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.

சென்னை ராஜிவ் காந்தி சாலையையும் - கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் டைடல் பார்க் சந்திப்பானது போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒரு சந்திப்பாகும். இந்த சந்திப்பின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு புதிதாக ஒரு யு-டர்ன் வடிவ மேம்பாலம் கட்டப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி, சென்னை டைடல் பார்க் சந்திப்பில் ரூ.27.50 கோடியில் புதிதாக கட்டப்பட்ட யு டர்ன் வடிவ மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவுற்று இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய மேம்பாலத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

510 மீட்டர் நீளமும், 8.50 மீட்டர் அகலமும் கொண்ட இந்த யு வடிவ மேம்பாலமானது திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ், சிஎஸ்ஐஆர் சாலை நோக்கி வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தை திறந்து வைத்ததோடு முதல் ஆளாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வாகனத்தில் புதிய மேம்பாலத்தை பயன்படுத்தி பயணித்தார். இதன் தொடர்ச்சியாக, புதிய யு வடிவ மேம்பாலத்துடன் டைடல் பார்க் சந்திப்பு அருகே ரூ.11.30 கோடி மதிப்பீட்டில் இரு முனைகளிலும் நகரும் படிக்கட்டுகளுடன் 5.25 மீட்டர் அகலமும் 155 மீட்டர் நீளத்துடன்,திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையம் முதல் டைடல் பார்க் மேம்பாலம் வரை புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய நடைமேம்பாலத்தையும் துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

Image


ராஜிவ் காந்தி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே யு டர்ன் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்தாண்டு நவம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து டைடல் பார்க் அருகில் கட்டப்பட்ட 2வது யு டர்ன் மேம்பாலத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்துள்ளார்.