மத்திய சென்னை, திருப்பெரும்புதூர் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!

 
udhayanidhi

மத்திய சென்னை, திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், வட சென்னை, தென் சென்னை மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை இன்று காலை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டோம். இந்நிலையில், மத்திய சென்னை, திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று மதியம் நடத்தினோம்.

தொகுதிக்குட்பட்ட மாவட்ட  அமைச்சர் - மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - மாவட்ட - பகுதி - வட்டக் கழக நிர்வாகிகள் - துணை மேயர் - மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் தேர்தல் தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்தோம். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கழகத் தொண்டர்களை அதற்காக தயார்படுத்துவது -  கள நிலவரம் - மக்களின் கோரிக்கைகள் என பல்வேறு அம்சங்கள் குறித்து கழக நிர்வாகிகள் கூறிய கருத்துக்களை கேட்டறிந்தோம்.  நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பெறும் வெற்றி இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் வகையில் களப்பணியாற்றிட வேண்டும் என உரையாற்றினோம் என குறிப்பிட்டுள்ளார்.