“இதை சொன்னால் சிலர் பயந்து நடுங்குகின்றனர்”- உதயநிதி ஸ்டாலின்
பேரறிஞர் அண்ணா பற்றவைத்த அறிவு தீ இன்றளவும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருப்பதாகவும், அதனால் தான் தீ பரவட்டும் என்று சொன்னால் இன்றளவும் சிலர் பயந்து நடுங்குவதாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, நந்தனம், YMCA உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் 49வது புத்தக கண்காட்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 2026 ஆம் ஆண்டிற்கான பபாசி விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்த மேடை எனக்கு புதிய மேடை கிடையாது. புத்தக கண்காட்சிகளை நானே சில ஆண்டுகள் திறந்து வைத்திருக்கிறேன், பல புத்தகங்களை இதை மேடையில் வெளியிட்டிருக்கிறேன், கலைஞர் பொற்கிழி விருதுகள் பபாசி விருதுகளை சில வருடங்கள் நானே வருகை தந்து வழங்கி இருக்கிறேன். 13 அரங்குடன் தொடங்கப்பட்ட இந்த புத்தக கண்காட்சி இன்று ஆயிரக்கணக்கான அரங்குகள் கடந்து விற்பனையாகி கொண்டிருக்கிறது. புத்தக கண்காட்சிக்கு நுழைவு கட்டணம் இல்லை என கூறியிருப்பதை வரவேற்கிறேன். துணை முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் என்பதைத் தாண்டி ஒரு பதிப்பாளராக இதில் கலந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி. இந்த ஆண்டு 25 புத்தகங்கள் எங்கள் பதிப்பகம் சார்பில் வெளியிட்டு இருக்கிறோம்.
வள்ளுவர் கோட்டத்தில் நாங்கள் நடத்திய புத்தக காட்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அறிவுத்திருவிழாவை சிறப்பாக நடத்தி முடிக்க எங்களுக்கு சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு ரோல் மாடலாக இருந்தது சென்னை புத்தகக் காட்சிதான். அந்த நன்றி உணர்வோடு தான் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டிருக்கிறேன்.சென்னை இந்தியாவின் பதிப்பு தலைநகராக உயர்ந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. பேசையும், படித்தும், எழுதியும் வளர்ந்த இயக்கம் திராவிட இயக்கம். தீ பரவட்டும் என்று சொன்னால் இன்று கூட பலர் பயந்து நடுங்குகின்றனர். எழுத்தாளர் பதிப்பாளர்களை கொண்டாட கூடிய இயக்கம் திராவிட இயக்கம். சென்னை புத்தகக் காட்சி நடத்துவதற்கு நம் அரசு 75 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி உள்ளது. நம் அரசு பல்வேறு நகரங்களில் அறிவுலகங்களை, நூலகங்களை திறந்து வைக்கிறது. 170 நூலகங்களை திமுக இளைஞரணி தனியாக நடத்தி வருகிறது.வாசிப்பை இயக்கமாக மாற்றுவதற்கு எங்களால் முடிந்த விஷயங்களை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம்” என்றார்.


