மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை - பள்ளி முதல்வர், செயலர் கைது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பள்ளி முதல்வர் மற்றும் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சல்மா மெட்ரிகுலேசன் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்த பொன் சிங் என்பவர் பள்ளி மாணவிகளை மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளுக்காக தூத்துக்குடிக்கு அழைத்து சென்றுள்ளார். மாணவிகளை மது அருந்த வற்புறுத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது என பொன் சிங் மாணவிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்த நிலையில், பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தலைமறைவான உடற்கல்வி ஆசிரியர் பொன் சிங்கை தேடி வந்தனர். பின்னர் கோவையில் பதுங்கி இருந்த பொன் சிங்கை கைது செய்து திருச்செந்தூர் அழைத்து வந்தனர். இந்த நிலையில், பள்ளியின் முதல்வர் சார்லஸ் ஸ்வீட்டி, , பள்ளியின் செயலர் சையது அகமது ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.