பொங்கல் சீர்வரிசை வைக்க சென்ற இருவர் மீது கார் மோதி உயிரிழப்பு! பார்க்க சென்ற ஒருவரும் பலி
வேப்பூர் அருகே பொங்கல் சீர்வரிசை வைக்க சென்ற இருவர் மீது கார் மோதியதில் இருவரும் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை பார்க்க ஆட்டோவில் சென்ற உறவினர்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சித்துர் கிராமத்தைச் சேர்ந்த சன்னியாசி மற்றும் காட்டுமயிலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வேப்பூர் அடுத்த அரியநாச்சி கிராமத்தில் உள்ள சன்னியாசி மகளுக்கு பொங்கல் சீர்வரிசை வைப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். அப்போது அவர்கள் மீது கார் மோதியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரது உடலையும் வேப்பூர் போலீசார் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இந்த தகவல் அறிந்த சன்னியாசியின் மகள் வேம்பரசி மற்றும் அவரது உறவினர்கள் அரியநாச்சி கிராமத்திலிருந்து ஒரு ஆட்டோவில் தந்தை மற்றும் உறவினர் உடலை பார்க்க சென்று கொண்டிருந்த பொழுது ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த வசந்தா என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்து இருவர் உயிரிழந்த இடத்திலிருந்து சில நூறு மீட்டர் தூரத்திலேயே இறந்தவர்களின் உடலை பார்க்கச் சென்ற உறவினர்கள் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


