தொடரும் அட்டூழியங்கள்...கள்ளச்சாராயம் காய்ச்சிய இரண்டு பேர் கைது!

 
arrest

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதாக விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் இரண்டு காவல் ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் தொடர்பான அதிரடி வேட்டை நடத்தப்பட்டு சுமார் 3000 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை பொருட்களை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அஞ்செட்டி அருகே உள்ள அட்டப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சக்திவேல் (வயது24), மெய்யழகன் (51). இவர்கள் 2 பேரும் சாராயம் காய்ச்சுவதாக அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அட்டப்பள்ளம் கிராமத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 2 பேரும் வீடு மற்றும் தோட்டத்தில் ஊறல் போட்டு சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.