ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி.. 24 மணி நேரத்தில் உருவாக வாய்ப்பு..!!
24 மணி நேரத்திற்குள்ளாக 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும், இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், ஒடிசா கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வடக்கு மத்திய பிரதேசத்தின் மத்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது எனவும், இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் ஜூலை 16, 17 தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.


