சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி இருவர் பலி

 
death

சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி தி.மு.க சத்தி வடக்கு ஒன்றிய பொருளாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட குன்றி மலை கிராமத்தில் இருந்து மாக்கம்பாளையம் மலை கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தத இருவரை யானை தாக்கியதில் உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி குன்றி மலை கிராமத்தை சேர்ந்தவரும், சத்தியமங்கலம் தி.மு.க வடக்கு ஒன்றிய பொருளாளராக பதவி வகித்து வரும்  பொம்மையன் மற்றும் அவரது நண்பர் சித்துமாரி ஆகிய இருவரும் இன்று காலை 11மணியளவில்  இருசக்கர வாகனத்தில் குன்றிமலை கிராமத்திலிருந்து மாக்கம்பாளையம் மலை கிராமத்திற்கு அடர்ந்த வனப்பகுதியில் உள்ள வனச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது புதர் மறைவில் இருந்த காட்டு யானை  ஒன்று இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளது. இதில் இருவரும் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் சென்று இருவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் இதே போல் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை காட்டு யானை தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்த  சம்பவம் மலை கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.