டீக்கடையில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு- மதுரையில் சோகம்

 
 டீக்கடையில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அதிகாலை டீக்கடை ஒன்றில் மின்சாரம் தாக்கியதில் உரிமையாளரின் மகன் மற்றும் டீக்கடை ஊழியர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே திண்டுக்கல் மதுரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள  ஆண்டிப்பட்டிபங்களா எனுமிடத்தில் சோமசுந்தரம் என்பவர் உணவகம் மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இப்பகுதியில் நேற்று இரவி பெய்த மழையின் காரணமாக  கடையில் இன்று அதிகாலை அலங்காரத்திற்காக தொங்கவிடப்பட்ட சீரியல் விளக்குகளில் இருந்து டீ போடும் பட்டறைக்கு மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. மின்சாரம் தாக்கியதில்  கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்த பாலகுரு வயது(50) என்பவர் கீழே விழுந்துள்ளார். அதனைப் பார்த்த கடையின் உரிமையாளர் மகனான ரஞ்சித் குமார் வயது(35) என்பவர் டீ மாஸ்டர் பாலகுருவை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
   
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த  மின்வாரியத்தினர் அப்பகுதியில் மின் தடையை ஏற்படுத்தினர். மேலும் வாடிப்பட்டி போலீசார் உயிரிழந்த இருவரின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் மின்சாரம் தாக்கி டீக்கடை உரிமையாளர் மகன் மற்றும் டீ மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.