அமெரிக்காவில் சோகம்: ஓணம் கொண்டாடிய மறுநாளே கேரளப் பெண்கள் இருவர் கொலை - தோழி சிறையில்!
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் அஞ்சனா ஹரி(35). திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர் அமெரிக்காவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
ஆன்மேரி மேத்யூ (40) பொறியாளராக உள்ளார். இவர்கள் இருவரின் தோழி அனிலா (32). கோட்டயத்தைச் சேர்ந்தவர். மூவரும் நெருங்கிய தோழிகள். சம்பவத்தன்று, அனிலா, தமது தோழி அஞ்சனாவை வீட்டை விட்டு வெளியே வரவழைத்து, கார் ஏற்றி படுகொலை செய்துவிட்டு தப்பி உள்ளார்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு காரில் தப்பித்ததை கண்ட அங்குள்ளோர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் மூலம் அந்த கார், அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.
அதன் பின்னர் அதை ஓட்டி வந்த அனிலாவை கைது செய்தனர். அதற்கு முன்னதாக, மற்றொரு தோழியான அன்மேரி மேத்யூவை சான் ஹோசே நகரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். அனைத்தையும் முடித்துவிட்டு, காரில் தப்பிச் செல்லும் போது, போலீசில் பிடியில் சிக்கி உள்ளார்.
வழக்கு பதிந்து போலீசார் முதல்கட்ட விசாரணையை நடத்தி உள்ளனர். அதில் கைது செய்யப்பட்ட அனிலா, அண்மையில் அமெரிக்காவில் வேலையை இழந்தார். அதே சமயத்தில் அவரின் இரு தோழிகளுக்கும் புதிய வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தாழ்வு மனப்பான்மை காரணமாக அவர் இந்த இரட்டைக் கொலையை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் கலிபோர்னியாவில் நடந்த ஓணம் கொண்டாட்டத்தில் மூன்று பெண்களும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர், தியேட்டரில் சினிமா பார்த்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்ட இருவரின் உடல்களையும் கேரளா கொண்டு வர மத்திய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

