அதிரடி திருப்பம்! டாஸ்மாக் வழக்கில் இருந்து நீதிபதிகள் விலகல்!

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு அறிவித்துள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாட்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது. அதில், தமிழகத்தில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்தது, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகள் லஞ்சம் வழங்கியது, கொள்முதலை குறைத்து காட்டியது, பணியிட மாற்றம், பார் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அந்த அறிக்கையில் கூறியுள்ளது. இந்த முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது. இந்நிலையில், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகியுள்ளனர். தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு அறிவித்துள்ளது.