தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 சிறுவர்கள் பலி! தாத்தா வீட்டிற்கு கோடை விடுமுறைக்கு சென்ற போது நேர்ந்த சோகம்
நாகப்பட்டினம் அடுத்த சிக்கல் அருகே மூடப்படாமல் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டு நான்கு வயது சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் அடுத்த ஆவராணி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கலைவாணன் என்பவருடைய மகன் பிரவின்சாய் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சாமிதுரை என்பவருடைய மகன் பவன்சாய் ஆகிய இரண்டு சிறுவர்களும் பள்ளி விடுமுறைக்காக சிக்கல்பத்து கிராமத்தில் வசிக்கும் தனது தாத்தா பாட்டி வீட்டிற்கு வந்திருந்தனர். இந்த நிலையில், அருகில் கட்டுமான பணி நடைபெற்று வந்த வீட்டில் மூடப்படாமல் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டு சிறுவர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. விளையாட சென்ற இரண்டு சிறுவர்களும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அப்போது, கட்டுமான வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் இரண்டு சிறுவர்களும் உயிரிழந்த நிலையில் மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேளாங்கண்ணி போலீசார், இரண்டு சிறுவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூடப்படாமல் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

