மழைநீரில் மூழ்கி இரண்டரை வயது குழந்தை பலி
மாங்காட்டில் வீட்டின் பின்னால் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி இரண்டரை வயது பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த மாங்காடு, ஜனனி நகர் அனெக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் குமார். லிப்ட் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியதர்ஷினி அம்பத்தூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு பிரணிகா ஸ்ரீ என்ற இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. வீட்டில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென காணாமல் போனதை கண்டு பெற்றோர் அந்த பகுதி முழுவதும் தேடிப்பார்த்தும் குழந்தை கிடைக்கவில்லை. இதையடுத்து வீட்டின் பின்பகுதியில் உள்ள காலி நிலத்தில் தேங்கி இருந்த மழைநீரில் குழந்தையின் கை தெரிவதை கண்டு இறங்கி பார்த்தபோது, குழந்தை பிரனிக்கா ஸ்ரீ நீரில் மூழ்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து குழந்தையை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன குழந்தை பிரனிகா ஸ்ரீ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் பின் பகுதியில் உள்ள காலி இடத்தில் தேங்கி இருந்த மழைநீரில் மூழ்கி இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


