தூய்மைப் பணியாளர்களை வரவழைத்து சந்தித்த தவெக தலைவர் விஜய்...!
சென்னை மாநகராட்சியின் 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே அமைச்சர்கள், மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து நேற்று 10 வது நாளாக அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் இன்று 11-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரடியாக சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களின் ஒரு குழுவினரை சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற தூய்மைப் பணியாளர்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து சுமார் ஒரு மணி நேரம் உரையாடினார்.
மேலும், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் அழுத்தம் கொடுக்கும் எனவும், தூய்மைப் பணியாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனவும் அவர்களுக்கு விஜய் உறுதி அளித்துள்ளார்.
கடந்த 10 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை அருகே போராடி வரும் தூய்மை பணியாளர்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரடியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் வந்து சந்திக்கவில்லை என விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

