ரூ.55,000 பெற்றுக்கொண்டு தவறான சிகிச்சை- 4 மாத கர்ப்பிணி உயிரிழப்பு.. கொந்தளித்த உறவினர்கள்
திருவாரூரில் தவறான சிகிச்சை அளித்ததால் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுக்கா, மேலராதாநல்லூர் அடுத்த குதம்பஅய்யனார் மேல தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரது மனைவி ராஜகுமாரி (33). இராஜகுமாரி கர்ப்பம் தரித்த நிலையில் கடந்த 8ஆம் தேதி திருவாரூர் வடக்கு வீதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். இராஜகுமாரிக்கு கர்ப்பம் ஏற்பட்டதில் பிரச்சனை இருப்பதாக கூறி அவரிடம் இருந்து சுமார் 55 ஆயிரம் ரூபாய் கட்டணம் பெற்றுக்கொண்டு தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறுவை சிகிச்சை செய்துள்ளது. அறுவை சிகிச்சை மேற்கொண்ட இராஜகுமாரிக்கு உடல்நிலை மிகவும் மோசம் அடைந்த நிலையில், தனியார் மருத்துவமனை நிர்வாகம் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை மூன்று மாத கர்ப்பிணி பெண் இராஜகுமாரி உயிரிழந்தார். தற்போது இவரது உடல் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜகுமாரி உயிரிழப்புக்கு காரணம் தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் பிரபாபாண்டியன் காரணம் எனவும், மேலும் பிரபாபாண்டியன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சீனியர் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருவதால் இந்த பிரச்சினை திசை திருப்பும் வகையில் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக (திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை) குற்றம் சாட்டி உயிரிழந்த இராஜகுமாரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திருவாரூர் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தனியார் மருத்துவமனை மீதும், மருத்துவர் பிரபாபாண்டியன் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக உயிரிழந்த ராஜகுமாரிக்கு 5 வயதில் மாற்றுத்திறனாளியான குழந்தை ஒன்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


