மின் கம்பி உரசி ஆடு மேய்க்க சென்ற பெண் உயிரிழப்பு! திருவாரூரில் சோகம்
திருவாரூரில் சாலை ஓரத்தில் தாழ்வாக சென்ற மின் கம்பி உரசி ஆடு மேய்க்க சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பேரளம் பகுதிக்கு உட்பட்ட மகாராஜபுரம் ஊராட்சி கணபதி விளாகம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி ஜெயந்தி (45).இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சுந்தரம் காலமாகிவிட்டார். மூத்த மகளுக்கு திருமணமான நிலையில் விவசாய கூலி வேலை செய்து வந்த ஜெயந்தி பிளஸ் டூ படித்த மகன் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அந்த பகுதியில் ஆடுகளை மேய விட்டு திரும்ப வீட்டிற்கு வரும் வழியில் கணபதி விளாகம் மெயின் ரோட்டில் சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பத்தில் மிகவும் தாழ்வான நிலையில் இருந்த மின்சார கம்பி கீழே விழுந்து கிடந்துள்ளது. அப்பொழுது அந்த வழியாக சென்ற ஜெயந்தி மீது அந்த மின் கம்பி உரசி உள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு ஆடும் உயிர் இழந்தது அந்தப் பகுதியில் மிகவும் பழுதடைந்த நிலையில் மின்மாற்றி அமைந்துள்ளது. மின் மாற்றியிலிருந்து சென்ற மின் கம்பத்தில் இருந்த மின் கம்பி கீழே விழுந்து கிடந்துள்ளது. மேலும் மின் கம்பத்தில் மின்கம்பி தாழ்வாக இருப்பது குறித்தும் இதனை மாற்றி அமைக்க கோரியும். பேரளம் மின்வாரிய அலுவலகத்திற்கு அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாலை ஓரத்தில் விழுந்து கிடந்த மின் மின் கம்பி உரசி ஆட்டுடன் ஜெயந்தி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பேரளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


