தமிழக அரசுப் பேருந்தில் புதுச்சேரி மது பாட்டில்களை கடத்திய ஓட்டுநர், நடத்துநர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பக்தர்கள் வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து பின்னர் 14 கிலோ மீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதால் பாண்டிச்சேரி சென்னை பெங்களூர் உள்ளிட்ட ஊர்களுக்கு அதிக அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாநகர மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் பணிமனை சார்பில் திருவண்ணாமலை To பாண்டிச்சேரி மாநிலத்திற்கு நாள் ஒன்றுக்கு 20-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் நேற்று பாண்டிச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்து TN 25 N 0659 இயக்கிய ஏழுமலை மற்றும் நடத்துனர் நல்லதம்பி இருவரும் பாண்டிச்சேரியில் இருந்து 750 மில்லி லிட்டர் அளவு கொண்ட 7 மதுபான பாட்டில்களை ஓட்டுநர் தனது இருக்கையில் பின் உள்ள புறபெட்டியில் மறைத்து வைத்து வந்துள்ளார். போக்குவரத்து துறை அதிகாரிக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில் பேருந்து நாட்றம்பள்ளி அருகே வரும்போது அரசு பேருந்தை பரிசோதகர் செல்வம் மற்றும் உமாபதி ஆகியோர் பேருந்து மடக்கி பிடித்து பரிசோதனை செய்த போது ஓட்டுனரின் இருக்கைக்கு பின்புறம் உள்ள புறப்பட்டியில் வைத்திருந்த 7 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் மது பாட்டில்களை அரசு துறை அதிகாரிகளே கடத்தி வருவதை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஓட்டுநர் ஏழுமலை மற்றும் நடத்துனர் நல்லதம்பி இருவருமே பலமுறை மதுபான பாட்டில்களை பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி திருவண்ணாமலை வரை உள்ள திண்டிவனம், செஞ்சி, நாட்டார்மங்கலம், சத்தியமங்கலம், கீழ்பெண்ணாத்தூர், செம்மேடு உள்ளிட்ட 7 இடங்களில் பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வரும் மதுபான பாட்டில்களை ஏஜென்ட்கள் மூலமாக விற்பனை செய்து வருவதாக கூறி இருவரையும் ஏற்கனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டித்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவருமே ஆளும் கட்சியை சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் என்பதால் அரசு போக்குவரத்து அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வந்ததின் விளைவாக மீண்டும் இவர்கள் மதுபான பாட்டில்கள் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து 7 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த பேருந்து பரிசோதர்கள் திருவண்ணாமலை போக்குவரத்து மண்டல தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வந்து துணை மேலாளர் முன்னிலையில் ஊற்றி தீ வைத்து எரித்து அழித்தனர். பாண்டிச்சேரி இருந்து மதுபானங்களை கடத்தி வந்த விவகாரத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோரை போக்குவரத்து துறை அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். இந்தச் சம்பவம் போக்குவரத்து துறை பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அலுவலக அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.