வெறும் கையால் சாக்கடையை அள்ளிய தூய்மை பணியாளர்... மாநகராட்சி ஆணையர் கொடுத்த விளக்கம்

 
s


திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட துர்க்கை அம்மன் கோவில் தெருவில் கையுறைகள் மற்றும் கால் உரைகள் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் கழிவுநீர் கால்வாய்களில் தேங்கி நிற்கும் கழிவுநீர் அடைப்புகளை அகற்றும் மாநகராட்சியின் துப்புரவு பணியாளரின் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாநகராட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் ஆன்மீக ஸ்தலமான அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி நாட்களில் பல லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்லக்கூடிய நிலையில் மாநகரின் பல்வேறு இடங்களில் அடிக்கடி கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கும்  நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட துர்க்கை அம்மன் கோவில் தெருவில்  கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் ஓடியதால் மாநகராட்சியின் துப்புரவு பணியாளர் கையுறை மற்றும் கால் உரையை அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கழிவுநீர் கால்வாயில் இறங்கி சாக்கடை அல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி நிர்வாகம் துப்புரவு பணியாளர்களுக்கு மாதம்தோறும் பாதுகாப்பு உபகரணங்கள் என கையுறை, கால் உரை, முக கவசம்  போன்ற உபகரணங்களை வழங்கியும், அணியாமல் துர்க்கை அம்மன் கோவில் தெருவில் துப்புரவு பணியாளர் பாதுகாப்பற்ற முறையில் வெறும் கையால் சாக்கடையை அள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி இந்தியா முழுவதுமே துப்புரவு பணியாளர்கள் யாரும் வெறுங்கையால் கழிவு நீர்களை அல்லவோ இறங்கி சுத்தம் செய்யவோ கூடாது என்றும் எந்திரங்களை கொண்டும் மற்றும் உபகரணங்களை கொண்டு மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும் என சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில்  திருவண்ணாமலை மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பாற்ற முறையில் வெறுங்கைகளால் கழிவுநீர் கால்வாயில் சுத்தம் செய்வது பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட நிர்வாகமும் உடனடியாக துப்புரவு பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய கையுறை கால்உரை முக கவசம் உள்ளிட்டவற்றை வழங்கி பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு தேவையான கையுறை கால் உரை உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் வழங்கிய நிலையிலும் அதை அணியாமல் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாகவும், மீண்டும் இதே போல் சம்பவம் நடக்காத வண்ணம் அவர்களை அழைத்து அறிவுரை வழங்குகிறேன் என்று தெரிவித்தார்.