தி.மலையில் அத்துமீறல்... இன்ஸ்டா பதிவால் சிக்கிய சின்னத்திரை நடிகை அர்ச்சனா!

 
அர்ச்சனா அர்ச்சனா

திருவண்ணாமலை அண்ணாமலையார் தீப மலையின் மீது அனுமதியின்றி ஏறிய சின்னத்திரை நடிகை அர்ச்சனா மற்றும் அவரது நண்பர் அருண் ஆகியோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். 

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கும் அண்ணாமலையார் திருக்கோவிலில் அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் பௌர்ணமி நாட்களில் பல லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் 2668 அடி உயரம் கொண்ட தீபமலை உள்ளது. இந்த மலையை சிவனாக கருதி அனுதினமும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை மீது மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அண்ணாமலையார் தீபமலை மீது பக்தர்கள் ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பிரபல சின்னத்திரை நடிகை அர்ச்சனா மற்றும் அவரது நண்பர் அருண் அண்ணாமலையார் தீபமலை மீது ஏறி அதனை விடியோ பதிவு செய்து அர்ச்சனா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது வைரலானதின் அடிப்படையில் இன்று திருவண்ணாமலை மாவட்ட வனத்துறையினர் சின்னத்திரை நடிகை அர்ச்சனா மற்றும் அவரது நண்பர் அருண் ஆகியோரை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து அர்ச்சனா மற்றும் அவரது நண்பர் அருண் ஆகியோர் தெரியாமல் ஏறிவிட்டோம் என கூறியதின் அடிப்படையில் வனத்துறையினர் அவர்கள் இருவருக்கும் தலா 5000 என 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து அவர்கள் அபராத தொகையை வனத்துறையில் செலுத்தியவுடன் அவர்கள் திரும்பச் சென்றனர். தீப மலையின் மீது ஏற தடை விதி திரிந்த நிலையில் சின்னத்திரை பிரபலங்கள் தீப மலையின் மீது அனுமதி இன்றி ஏறி அபராதம் விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.