ஜனநாயகன் லீக் சர்ச்சை - தயாரிப்பு நிறுவனம் எடுத்த முடிவு
ஜனநாயகன் படம் இணையதளத்தில் கசிந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தனது கடைசி படம் என அறிவித்து நடித்துள்ள ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், படத்தில் ராணுவம் சார்ந்த விஷயங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறி, படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பி, சென்சார் போர்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடனடியாக படத்துக்கு சான்று வழங்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, படத்துக்கு உடனடியாக சான்று வழங்கும்படி தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க தனி நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது.ஆனால், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய பட தயாரிப்பு தரப்பு, தனி நீதிபதி முன் நிலுவையில் இருந்த வழக்கை திரும்பப் பெற்றது.சென்சார் போர்டின் மறு ஆய்வு குழு ஆய்வில் படம் இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் ஜனநாயகன் படம் இணையதளத்தில் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக, பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் முறையீடு செய்யப்பட்டது.முறையீட்டைக் கேட்ட நீதிபதி, இதுசம்பந்தமாக மனுத்தாக்கல் செய்தால், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.


