எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு யதார்த்தம் புரியவே போவதில்லை- விஜய்
தமிழக மக்களே… நீங்கள் அனைவரும் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க விரும்பினீர்கள் என்பது நமக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும், சில சூழல்களால், நமக்கு வாக்களிக்க இயலாமல் போனவர்கள், இப்போது மனம் வருந்துவதையும் நம்மால் உணர முடிகிறது. இனிவரும் காலங்களில் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் உங்கள் தமிழக வெற்றிக் கழகம் பெறும் என்பதையும் உறுதியாக நம்புகிறோம் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று சட்டமன்றத்தில் மக்கள் அரசு, அதாவது நமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்கள் நலன் விரும்பும் முதலமைச்சர் என்ற முறையில் நாம் கொண்டு வந்தோம். அதன் மீதான விவாதம் நடைபெற்றது. மக்களே… நீங்கள் மிகப் பெரும் நம்பிக்கை வைத்துள்ள உங்கள் அன்பிற்குரிய அரசை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு சட்டமன்றக் கட்சியினரும் பேசினர். சிலர் நடுநிலை வகிப்பதாகவும் தெரிவித்தனர். சிலர் வெளிநடப்பும் செய்தனர். நம்பிக்கைத் தீர்மானம் மீதான ஆதரவு மற்றும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், எண்ணிக் கணக்கிடும் முறையில் அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பின்படி, உங்கள் அரசு மீது நம்பிக்கை வைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 144. எதிர்ப்பு தெரிவித்தோர் 22. நடுநிலை வகித்தோர் 5. பங்கேற்காதோர் 60. இதன் மூலம், மக்கள் ஆதரவு பெற்ற தமிழக வெற்றிக் கழக அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில் மகத்தான வெற்றி பெற்றதாக மாண்புமிகு பேரவைத் தலைவரால் பேரறிவிப்பு செய்யப்பட்டது.
நமது மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்த அனைத்து இயக்கங்களைச் சார்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல, நம்மை ஆதரித்த அனைத்து இயக்கங்களின் தலைவர்களுக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.சட்டமன்ற நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்யும்போது, ஆளும் கட்சிக்கான ஆதரவை மட்டும் காட்டுவது ; எதிர்ப்பை மக்கள் யாரும் பார்க்க முடியாமல் செய்யும் வகையில் நேரலையை நிறுத்தி இருட்டடிப்புச் செய்வது என்பது போன்று சட்டமன்றத்தில் நாம் எதையும் ஒளிக்கவில்லை. மறைக்கவில்லை. அனைத்தையும் இன்றைய நேரடி ஒளிபரப்பில் உலகமே பார்த்ததுதான் அதற்கு உறுதியான சான்று.தமிழக மக்களே… நீங்கள் அனைவரும் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க விரும்பினீர்கள் என்பது நமக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும், சில சூழல்களால், நமக்கு வாக்களிக்க இயலாமல் போனவர்கள், இப்போது மனம் வருந்துவதையும் நம்மால் உணர முடிகிறது. இனிவரும் காலங்களில் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் உங்கள் தமிழக வெற்றிக் கழகம் பெறும் என்பதையும் உறுதியாக நம்புகிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

