“ஆக.21ஆம் தேதி மதுரையில மாநாடு! அனைவரும் பாதுகாப்பா வந்துடுங்க”- விஜய்

 
vijay vijay

தவெகவின் 2வது மாநில மாநாடு வரும் 21ம் தேதி மதுரையில் நடைபெறும் என அக்கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

விஜய்

இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாற்றத்தை நோக்கிய தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வீறுகொண்டு வெற்றிநடை போட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாகக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்டு 25ஆம் தேதி (25.08.2025) மதுரையில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தேன். ஆனால், மாநாடு முடிந்த ஒருநாள் இடைவெளியில் விநாயகர் சதுர்த்தி விழா வருவதால், காவல் துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டியிருக்கிறது என்றும், எனவே மாநாட்டிற்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாக 18.08.2025 முதல் 22.08.2025 வரை ஏதேனும் ஒரு தேதியில் மாநாட்டை நடத்தும்படியும் காவல் துறை கேட்டுக்கொண்டது. அதன்பேரில், கழகத்தின் மாநில மாநாடு முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்டு 21ஆம் தேதி (21.08.2025) வியாழக்கிழமை அன்று, மாலை 4.00 மணி அளவில் ஏற்கெனவே அறிவித்த அதே மதுரை மாநகரில் அதே பிரம்மாண்டத்தோடும் கூடுதல் உற்சாகத்தோடும் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதற்கான பணிகள், ஏற்கெனவே சிறப்பான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணிகள் தற்போது மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே கழகத் தோழர்கள் வரும் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள கழகத்தின் மாநில மாநாட்டிற்கு மிகவும் பொறுப்புடனும் பாதுகாப்புடனும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.