13 ஏரிகளை அழித்தால் சென்னை வெள்ளக்காடாகும்! ஓட்டு அரசியலுக்காக இதை நான் பேசவில்லை- விஜய்

வாக்கு அரசியலை எல்லாம் தாண்டி விவசாய நிலங்களை அழிக்க துணைப் போகும் அரசு மக்கள் விரோத அரசாகத்தான் இருக்க முடியும் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரிடையே உரையாற்றிய தவெக தலைவர் விஜய், “பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் திரும்ப பெற வேண்டும். ஆளுங்கட்சியின் நாடகத்தை பார்த்துக்கொண்டு இனியும் மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள். வளர்ச்சி என்ற பெயரில் நடைபெறும் அழிவு மக்களை பாதிக்கும். 910 நாட்களுக்கு மேலாக மண்ணிற்காக போராடி வருகிறீர்கள். உங்கள் போராட்டம் பற்றி சிறுவன் பேசியதை கேட்டேன். என்னுடைய பயணத்தை தொடங்க இது தான் சரியான இடம். ஓட்டு அரசியலுக்காக இதை நான் பேசவில்லை.
விவசாய நிலங்களை அழிக்கும் அரசு நிச்சயம் மக்கள் விரோத அரசாக தான் இருக்கும். 13 ஏரிகளை அழித்து நிறைவேற்றப்பட உள்ள பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும். பரந்தூர் விமான நிலையத்திற்காக 13 ஏரிகளை அழித்தால் சென்னை வெள்ளக்காடாகும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலையை எதிர்த்த நீங்கள் தற்போது பரந்தூர் விமான நிலையத்திற்கு ஏன் ஆதரவு தெரிவிக்க வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பினார்.