உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்காத ஸ்டாலின் சார் அரசை தூக்கி வீசியெறிவோமா? - விஜய்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய விஜய், “பெண்கள் பாதுகாப்பு இல்லாத, போதைப்பொருள் அதிகமாக உள்ள இந்த அவலத்துக்கு திமுகவே காரணம். தமிழகம் இந்த நிலைக்கு செல்ல திமுகதான் காரணம். திமுக ஆட்சி விரைவில் விடை பெறப்போகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத, சட்டம் ஒழுங்கு சரியில்லாத, போதைப்பொருள் அதிகமாக உள்ள நம் தமிழ்நாட்டை நாம் காப்பாற்றியே ஆக வேண்டும். தமிழ்நாட்டை இப்படி ஒரு நிலைமைக்கு கொண்டுவர தீயசக்தி திமுகதான் காரணம். பணம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு அவர்கள் காதிலேயே விசிலை ஊதி அனுப்புங்கள். ஸ்டாலின் சாருக்கு மக்கள் எல்லாம் முக்கியம் இல்லை. அவருக்கும் திமுக அரசுக்கும் குடும்பத்துடன் கொள்ளையடிப்பது மட்டும்தான் முக்கியம்.. நகராட்சித் துறையில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளது. நமது குழந்தைகள் வேலை வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், காசை வாங்கிக் கொண்டு தகுதி இல்லாதவர்களுக்கு வேலை தருகிறார்கள்.” என்றார்.
முன்னதாக அசம்பாவிதத்தை தவிர்க்க போலீசார் அறிவுரையை ஏற்று 2 நிமிடங்களில் பேச்சை முடித்துக்கொண்ட விஜய், கொளத்தூரில் இருந்து புறப்பட்டார். அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியதால் அசம்பாவிதத்தை தவிர்க்க போலீசார் அறிவுரை கூறியதை அடுத்து, பிரச்சாரம் விரைவில் நிறைவடைந்தது. கூட்டநெரிசல் ஏற்பட்டதால் போலீஸ் அனுமதித்த இடத்திற்கு 100 மீட்டர் முன்னே விஜய் வாக்கு சேகரித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

