“கையில் மதுவுடன் ஆட்டம்- 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ”- விஜய் சரவணன் விளக்கம்

 
ச்

தஞ்சை தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆர். விஜய் சரவணன் கையில் மது பாட்டிலுடன் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இது தவெகவிற்கு எதிராக திட்டமிட்டு கட்டமைக்கப்படும் பொய்ப் பிரச்சாரம் என அவர் கூறியுள்ளார்.



 

வாட்ஸ் அப் மூலம் பரப்பப்படும் போலி அவதூறுகளுக்கு தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் ஆர். விஜய் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலை முதல், ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பக்கங்கள் மூலமாக மக்களிடையே வீண் பதற்றத்தை உருவாக்கும் நோக்கில் ஒரு திட்டமிட்ட பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. 'மாற்றத்திற்கான சரியான தேர்வு தமிழக வெற்றிக் கழகம் (TVK) அல்ல' என்ற ஒரு தவறான பிம்பத்தை மக்கள் மனதில் விதைக்க சில அரசியல் எதிரிகள் மிகவும் கீழ்த்தரமான வேலைகளில் இறங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக. 10 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு தனிப்பட்ட நிகழ்வின் வீடியோவை, தேர்தல் முடிவுகள் வெளியான அன்று மாலை நான் கொண்டாடியதாகச் சித்தரித்து பரப்பி வருகின்றனர். மேலும். சில சமூக வலைத்தளப் பிரபலங்களுக்கு (Influencers) அடையாளம் தெரியாத புதிய வாட்ஸ்அப் (WhatsApp) எண்களில் இருந்து இந்த பழைய வீடியோவை அனுப்பி, இந்த அவதூறைப் பரப்பச் சொல்லி திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான அன்றைய தினத்தின் உண்மை நிலை என்ன என்பது ஊடகங்களுக்கும், தஞ்சை மக்களுக்கும் நன்றாகவே தெரியும். அன்று மாலை அதிகாரியிடம் வெற்றிச் சான்றிதழைப் பெற்ற பிறகு, நான் நேரடியாகச் சென்றது என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தஞ்சாவூர் பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கத்தான். அதன்பின், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் தஞ்சாவூர் ரயில் நிலையம் (Junction) ஆகிய இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். இந்த நிகழ்வுகளை முடித்துவிட்டுத்தான் நான் சென்னைக்கு எனது பயணத்தைத் தொடங்கினேன். 

அன்றைய தினத்தின் இந்த முழுமையான பயண விவரங்களும், புகைப்படங்களும், நேரலை வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகவே உள்ளன. உண்மை இவ்வாறு ஊரறிந்த விஷயமாக இருக்க. ஒரு பழைய வீடியோவை வைத்து மக்களின் தீர்ப்பைக் கொச்சைப்படுத்த நினைப்பது அவர்களின் அரசியல் விரக்தியையே காட்டுகிறது. இதுபோன்ற போலி செய்திகளைப் பரப்புபவர்கள் மற்றும் புதிய எண்களில் இருந்து அவதூறு பரப்ப தூண்டுதலாக இருக்கும் நபர்கள் மீது சட்டப்படியான மற்றும் சைபர் கிரைம் மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்ற மலிவான திசைதிருப்பல்களைத் தாண்டி. தஞ்சாவூர் மக்களின் வளர்ச்சிக்கான எனது பணிகளும், த.வெ.க-வின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளும் எந்த தடங்கலும் இன்றி முழு வீச்சில் தொடரும். பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.